வால்பாறை: தமிழகத்திலுள்ள கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் பகுதி, அதிக மழை பெய்வதால் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு 17 நாளில் 114 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார்உள்ளடங்கிய வால்பாறையில் தென்மேற்கு பருவமழை ஜூன் & செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் பெய்கிறது. இதுதவிர ஜனவரி முதல் மே வரை தொடர்ந்து அவ்வப்போது மழைபெய்கிறது. தென்மேற்கு பருவமழை முதல் மழையளவு ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. ஜூன் முதல் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை கடந்த 17 நாளில் 114 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தினசரி சராசரியாக 6.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆண்டு சராசரி மழையளவில் 4ல் ஒரு பங்கை கடந்த 17 நாளில் எட்டியுள்ளது. தற்போதைய மழை பொழிவை கணக்கிடுகையில் இந்த ஆண்டு 500 செ.மீ. அளவை மழை எட்டும் வாய்ப்புள்ளது.
பெய்யும் மழையின் பெரும்பகுதி கீழ்நீராறு அணை என்றழைக்கப்படும் சின்னக்கல்லார் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து சோலையார் அணைக்கு சென்று, கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு நீராதாரமான பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டத்திற்குட்பட்ட 4 லட்சம் ஏக்கருக்கு நீராதாரமாக உள்ளது.
No comments:
Post a Comment